கங்கனா ரனாவத் எக்ஸ் தளம்
சினிமா

”பாலிவுட் காதல் படங்கள் திருமண முறையை சிதைக்கின்றன” கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு

நடிகை கங்கனா ரணாவத், பாலிவுட் காதல் படங்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைச் சிதைப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

Prakash J

நடிகையும் இயக்குநருமான கங்கனா ரனாவத், தற்போது இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியாக உள்ளார். இவர், அவ்வப்போது சர்ச்சைப் பேச்சுகளில் சிக்கி இணையத்தில் வைரலாவது உண்டு. சமீபத்தில் அவர் இயக்கி நடித்த ‘எமர்ஜென்சி’ படம் வெளியானது. இதற்கு பல்வேறு இடங்களில் கிளம்பியது.

இந்த நிலையில், இந்திய திருமண முறை குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். ஆர்த்தி கதவ் இயக்கத்தில், சான்யா மல்ஹோத்ரா நடிப்பில் வெளியான ’Mrs’ (மிஸஸ்) திரைப்படம், கூட்டுக் குடும்பங்களில் நிலவும் ஆணாதிக்கப் பிரச்னை, நிச்சயிக்கப்பட்ட திருமணங்களால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசியிருந்தது. இதன்மூலம் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் இல்லத்தரசிகள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “இந்தியக் கூட்டுக்குடும்பங்களைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். நான் வளரும்போது, ​​வீட்டைக் கட்டுப்படுத்தாத, எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தூங்க வேண்டும், எப்போது வெளியே செல்ல வேண்டும் என்று கட்டளையிடாத, தன் கணவரிடம் அவர் செலவழித்த ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கேட்காத ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை.

கங்கனா ரனாவத்

அப்பா எங்களுடன் வெளியே சாப்பிட விரும்பும் போதெல்லாம் அம்மா எங்கள் அனைவரையும் திட்டினார். ஏனென்றால் எங்களுக்காகச் சமைப்பது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதோடு உணவின் சுகாதாரம்/ஊட்டச்சத்து உட்படப் பல விஷயங்களை அம்மாவால் கட்டுப்படுத்த முடிந்தது. வயதானவர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு ஆயாக்களாகவும் உணர்ச்சிப்பூர்வமாக ஆதரவு கொடுப்பவர்களாகவும் பணியாற்றினர்.

திருமணங்கள் கவனத்தையோ அல்லது அங்கீகாரத்தையோ பெறுவதற்கான ஒரு வழியாக இல்லாமல், பலவீனமானவர்களின், குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காகவே செயல்படுகின்றன. முந்தைய தலைமுறையினர் பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களிடம் கேள்வி கேட்காமல் தங்கள் கடமைகளைச் செய்தனர்.

கங்கனா ரனாவத்

பல பாலிவுட் காதல் கதைகள் திருமண முறையைச் சிதைத்துவிட்டன. நாட்டில் திருமணங்கள் எப்படி இருந்ததோ அப்படியே எப்போதும் இருக்க வேண்டும். அதற்கு ஒரு காரணம் இருந்தது. உங்கள் கடமையைச் செய்யுங்கள். கடமை செய்துவிட்டு சென்று கொண்டிருங்கள். வாழ்க்கை குறுகியது மற்றும் விரைவானது” என அதில் தெரிவித்துள்ளார்.