சினிமா

நடிகை காஜல் அகர்வாலை கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்

சங்கீதா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலுக்கு, கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்துக் கொள்ளும் வசதியையும் கொண்டது இந்த கோல்டன் விசா. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், அமலா பால், லஷ்மி ராய், பாடகி சித்ரா உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. 

தமிழ் திரையுலகில் சமீபத்தில் நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில், தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த காஜல் அகர்வால், கோல்டன் விசா வழங்கிய அமீரக அதிகாரிகளுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளதாவது, “கோல்டன் விசா பெற்றதில் மகிழ்ச்சி. எங்களைப் போன்ற திரைக் கலைஞர்களுக்கு இந்த நாடு எப்போதும் ஊக்கமளித்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எதிர்கால ஒத்துழைப்புக்கு நன்றியுடன் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.