சினிமா

’உலகம்மை’ - திரைப்படம் ஆகிறது சு.சமுத்திரத்தின் ’ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவல்

sharpana

தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான எழுத்தாளரான சு.சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே நாவலை புதிய திரைப்படம் உருவாகிறது. 

தமிழ் சினிமாவில் நாவலை தழுவி திரைப்படங்களை உருவாக்கும் போக்கும் மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது ஊருக்குள் ஒரு புரட்சி, வேரில் பழுத்த பலா போன்ற முக்கியத்துவம் வாய்ந்த நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் தமிழ் உலகிற்கு அளித்த எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே நாவலை தழுவி புதிய திரைப்படம் உருவாகிறது. நாவலின் மையான பெண் கதாபாத்திரமான ’உலகம்மை’ என்ற பெயரிலே இந்தப் படம் உருவாகிறது.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ’காதல் FM', 'குச்சி ஐஸ்' உள்ளிட்டப் படங்களை இயக்கிய விஜய் பிரகாஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். ’96’, ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை கெளரி கிஷன் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

 இப்படத்தில் ஹீரோவாக மித்ரன் நடிக்கிறார். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சு.சமுத்திரத்தின் ஒரு கோட்டுக்கு வெளியே நாவல், தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு படைப்பாகும். உலகம்மை என்ற பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உணர்வுபூர்வான கதையான எழுதியிருப்பார் சமுத்திரம். “ஒரு கோட்டுக்கு வெளியே” என்ற தலைப்புக்கு ஏற்றார்போல் அந்த காலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சிக்கலில் வட்டமான ஒரு கோட்டுக்குள் கடன்பட்டவர்களை நிறுத்தி அவமானப்படுத்தும் ஒரு வழக்கம் இருந்தது. இது பிற்காலத்தில் தடை செய்யப்பட்டாலும் அதனை மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நாவலில் சித்தரித்திருப்பார் சமுத்திரம். சாதிய ரீதியாகவும் எல்லா சமுதாயத்திலும் உள்ள கஷ்டப்படுகின்ற ஏழை, எளிய மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டிருக்கும். ஒரே சாதிக்குள் இருந்தாலும் எப்படி ஏழைகள் அதே சாதிக்குள் இருப்பவர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை மிகவும் காட்டமாக பேசியிருக்கும் ஒரு கோட்டுக்கு வெளியே நாவல். 

சமீப காலமாகவே நாவல்களை படமாக்கும் முயற்சிகள் பலரால் எடுக்கப்பட்டு வருகின்றனர். இயக்குநர் வெற்றி மாறன் வெக்கை நாவலை தழுவி அசுரன் படத்தையும், லாக்கப் என்ற நாவலை தழுவி விசாரணை படத்தையும் எடுத்திருப்பார். தமிழ் சினிமா வரலாற்றில் பலரும் நாவலை தழுவி படங்களை எடுத்திருப்பார்கள். புதுமைப்பித்தனின் சிற்றன்னை கதையை கொண்டு உதிரிப்பூக்கள் என்ற காவியத்தை கொடுத்தார் இயக்குநர் மகேந்திரன். அதேபோல், உமா சந்திரனின் முள்ளும் மலரும் நாவலை மையமாக கொண்டே ரஜினியை வைத்து முள்ளும் படத்தை கொடுத்தார் மகேந்திரன்.