நடிகையிடம் யூடியூபர் அநாகரிகமான கேள்வி கேட்ட விவகாரத்தில், நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்துள்ளனர்.
நடிகையிடம் யூடியூபர் அநாகரிகமான கேள்வி கேட்ட விவகாரத்தில், நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்துள்ளனர். பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கெளரி கிஷனுக்கு நடந்த நிகழ்வுக்கு குஷ்பு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். பெண் நடிகையின் உடல் எடை குறித்து கேள்வி கேட்டது அவமானம் என அவர் சாடியுள்ளார். மேலும், அந்த கேள்வியை எதிர்த்து தைரியமாக கருத்து தெரிவித்ததாக கெளரி கிஷனுக்கு, குஷ்பு பாராட்டும் தெரிவித்துள்ளார்.
நடிகையின் உடல் எடை குறித்து யூடியூபர் எழுப்பியது அநாகரிகமான கேள்வி என கண்டனம் தெரிவித்துள்ள நடிகை ரோகிணி, திறமைசார்ந்து கேள்விகளை முன்வைக்கவேண்டும் என்றும், நடிகை கவுரிக்கு முழு ஆதரவை அளிப்பதாகவும் கூறியுள்ளார். கௌரி கிஷன் அந்த கேள்வியையும் சூழலையும் மிகவும் அற்புதமாக கையாண்டதாக பாடகி சின்மயி குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு இளம் வயதில் தனது நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக நின்றதற்கு பாராட்டுகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை கௌரி கிஷனுக்கு பாராட்டு தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், யூடியூபரின் செயல்களை வன்மையாக கண்டிப்பதாகவும், அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் வெட்கக்கேடானவை என்றும் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர்கள் போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமான கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவதும் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், கௌரி கிஷனுக்கு நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகக் கூறியுள்ளது. இனி எதிர்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, கலந்து ஆலோசித்து தேவையான முன்னெடுப்புகளை தொடங்குவோம் என்றும் நடிகர் சங்கம் உறுதியளித்துள்ளது.
இதேபோன்று சென்னைபத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் எடையை கேலிக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு கேள்வி கேட்பது அநாகரிகமானது; அருவருக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், கௌரி கிஷன் தனது எதிர்ப்பைத் தெரிவித்த பிறகும் கேள்வியை நியாயப்படுத்தி பெண் திரைக்கலைஞரை நோக்கி கடினமான குரலில் எதிர் விவாதம் நடத்திய யூடியூபரின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.