தனது எடை குறித்து கருத்து தெரிவித்ததற்காக யூடியூபர் மன்னிப்பு கேட்டதற்கு, நடிகை கௌரி கிஷன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 'அதர்ஸ்' படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நடிகை கெளரி கிஷனின் உடல் எடை குறித்து யூடியூபர் ஒருவர் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கவுரி கிஷன், நேரடியாகவோ, மறைமுகமாகவோ உருவக்கேலி செய்வதை ஏற்க முடியாது என பகிரங்கமாக கருத்து தெரிவித்தார். கெளரி கிஷனுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு, ரோகிணி, பாடகி சின்மயி, இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் சங்கம் உள்ளிட்ட பலரும் கண்டம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து அந்த யூடியூபருக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டார். இதுதொடர்பாக அந்த யூடியூபர், ”நடிகை கவுரி கிஷனின் எடை குறித்து தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தனது கேள்வியால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தனது எடை குறித்து கருத்து தெரிவித்ததற்காக யூடியூபர் மன்னிப்பு கேட்டதற்கு நடிகை கௌரி கிஷன் கண்டனம் தெரிவித்துள்ளார். ”பொறுப்புணர்வில்லாத மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல. முக்கியமாக, கவுரி கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்டாள்; அது ஜாலியான கேள்விதான் அல்லது அதைவிட மோசமாக, நான் யாரையும் உடல்ரீதியாக அவமதிக்கவில்லை எனச் சொல்லி தட்டிக்கழிப்பதும் மிகப்பெரிய பிரச்னைதான். நான் தெளிவாகச் சொல்கிறேன். மேடைத்தனத்துடன் கூடிய போலி வார்த்தைகளால் வெளிப்படும் மன்னிப்பை நான் ஏற்கமாட்டேன். சரியாக நடந்துகொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.