இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் திரைப்படம் மூலம் இந்திய திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. அதனைத்தொடர்ந்து இந்தியில் நடித்த அவர், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களிலேயே அதிகமாக நடித்து பிரபலமானார்.
தமிழ் திரைப்படங்களை பொறுத்தவரை நடிகர் விஜய் உடன் சச்சின், வேலாயுதம், ரவி மோகனுடன் சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷ் உடன் உத்தமபுத்திரன், பரத் உடன் சென்னைக் காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் அவர் ஏற்றுநடித்திருந்த குறும்புத்தனங்கள் நிறைந்த ஹாசினி கதாபாத்திரம், அதிகப்படியான ரசிகர்களின் விருப்ப கதாபாத்திரமாக இன்றளவும் இருந்துவருகிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தென்னிந்திய திரைப்படங்களில் வலுவான கதாபாத்திரங்கள் கொடுக்கப்படவில்லை என்பதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் ஜெனிலியா, தென்னிந்திய திரைப்படங்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் அமீர் கான் மற்றும் ஜெனிலியா நடிப்பில் உருவாகியிருக்கும் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், பட புரோமோஷனுக்காக பல்வேறு நேர்காணல்களில் அமீர் கானும், ஜெனிலியாவும் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் சமீத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜெனிலியாவிடம், தென்னிந்திய படங்களில் வலுவான கதாபாத்திரங்கள் தரப்படவில்லை என்ற கேள்விக்கு மறுத்து பேசினார்.
இதுகுறித்து பேசிய அவர், “இதனை மறுக்கிறேன். நீங்கள் என்னுடைய தென்னிந்திய படங்களைப் பார்த்தால் தெரியும், எனக்கு எப்போதும் சிறந்த கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுதான் எனக்கு நிறைய விஷயங்கள் கற்றுக்கொடுத்தது. அங்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக என்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
ஹைதராபாத்தில் ஹாசினி, தமிழில் ஹரிணி, மலையாளத்தில் ஆயிஷா என எனது கதாப்பாத்திரங்களை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள். நான் அறிமுகமானது ஷங்கர் படத்தில், ராஜமௌலி படத்தில் நான் நடித்திருக்கிறேன். முன்னணி நட்சத்திரம் துவங்கி புதுமுகம் வரை பலருடன் நான் நடித்திருக்கிறேன். இத்தகைய விஷயங்களினால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" என்று பேசியுள்ளார்.