Chrisann Pereira
Chrisann Pereira kevin.pereira8 / Instagram
சினிமா

”கழிவறை தண்ணீரில்தான் காஃபி போட்டு குடித்தேன்” - மோசமான சிறை அனுபவத்தை பகிர்ந்த மும்பை நடிகை!

Janani Govindhan

போதைப்பொருள் வைத்திருந்ததாக மும்பையைச் சேர்ந்த கிறிஸான் பெரேய்ரா ஷார்ஜா ஜெயிலில் சிறைவாசம் இருந்ததை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஷார்ஜா சிறையில் இருந்த நடிகை கிறிஸான் நேற்று (ஏப்.,26) ஜெயிலில் இருந்து வெளியேறியிருக்கிறார். இதனையடுத்து தனது ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்ஸ்களுக்கும் தனது சிறை அனுபவத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், “3 வாரம், 5 நாட்கள் ஆனது. இந்த நாட்களில் சிறையில் இருக்கும் போது என்னுடையை தலை முடியை துணி துவைக்கும் பவுடரை கொண்டே கழுவினேன். கழிவறையில் வரும் தண்ணீரை பிடித்தே காஃபி போட்டு குடித்தேன். அவ்வப்போது சிறையில் பாலிவுட் படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். எத்தனையோ லட்சியங்களுடன் இருந்து வந்தேன். ஆனால், சிறைக்கு கொண்டு வந்துவிட்டதே என படம் பார்க்கும் போதெல்லாம் அழுகை மட்டுமே வரும்.

சில கொடூரரர்களின் கேவலமான விளையாட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்களெல்லாம்தான் உண்மையான தீரர்கள். என் வீட்டுக்கு செல்ல மிகவும் ஆர்வமாகவே இருக்கிறேன்.

இதுபோன்ற இரைகளுக்கும், மோசடிகளுக்கும் சிக்கிக் கொண்ட எனக்கும் என்னை போன்றவர்களுக்கும் ஆதரவாக இருப்பதற்காக அனைவருக்கும் நன்றிகள். நீதியே எப்போதும் வெல்லும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார் நடிகை கிறிஸான்.

கிறிஸான் சிறை சென்றதன் பின்னணி:

கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் சென்ற போது நடிகை கிறிஸானிடம் இருந்த கோப்பையில் போதைப் பொருள் இருப்பதை கண்ட போலீசார் அவரை கைது செய்து ஷார்ஜா சிறையில் அடைத்திருக்கிறார்.

அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிறிஸான் பெரேய்ரா மற்றும் அவரது தாயார் மீதான பகை காரணமாக ஆண்டனி பால் என்பவரும் அவரது கூட்டாளியுமான ரவியும் சேர்ந்து கிறிஸானிடம் கோப்பையை கொடுத்தில் அதில் போதைப் பொருளையும் மறைத்து வைத்திருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது.

மேலும், இதை காரணமாக வைத்து கிறிஸானை ஜெயிலில் இருந்து விடுதலை செய்வதற்காக இந்தியாவில் உள்ள அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரிடம் லட்சக் கணக்கில் பணத்தை கறப்பதற்காக திட்டமிட்டிருந்ததும் அம்பலமாகியிருக்கிறது.

எனினும் பால் மற்றும் ரவியின் இந்த சதித்திட்டம் தெரிய வந்ததால் அவர்கள் இருவரையும் சி.ஐ.டி போலீஸ் கைது செய்து தகுந்த வழக்கும் பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே கிறிஸானின் சகோதரர் கெவின் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பால் மற்றும் ரவியை சி.ஐ.டி. போலீசார் கைது செய்திருப்பது குறித்தும் வழக்கின் பின்னணி குறித்தும் பதிவிட்டிருக்கிறார். அதில், “என் சகோதரி மட்டுமல்லாமல் இன்னபிற அப்பாவிகளையும் இதுபோன்று போதை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள் இந்த ஆண்டனி பாலும் ரவியும்.

பாதிக்கப்பட்டவர் போலீசிடம் சிக்கியதும் அதை வைத்து சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் பணம் பறிப்பதுதான் அவர்களின் வேலையாக இருக்கிறது.” என கெவின் குறிப்பிட்டுள்ளார்.