அமீர் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ’யோகி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகாராக அறிமுகமானார் யோகி பாபு. வேலாயுதம், பட்டத்து யானை, சென்னை எக்ஸ்பிரஸ், சூது கவ்வும், மான் கராத்தே, ஐ, யாமிருக்க பயமே, காக்கி சட்டை, கொம்பன், காக்கா முட்டை, வேதாளம், சர்கார், பிகில், பரியேறும் பெருமாள், தர்பார் என ரஜினி, விஜய், அஜித் போன்ற ஸ்டார் நடிகர்களுடன் நடித்து முன்னணி காமெடி நடிகரானார்.
இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவை உருகி உருகி காதலித்து ஹீரோவாக அத்தனை திறமைகளையும் பெற்றுவிட்டார். அதனால், அதே ஆண்டு இறுதியில் வெளியான ’தர்மபிரபு’ படத்தில் எமன் கெட்டப்பில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமா துறையினரை புருவம் உயர்த்தவைத்து நம்பிக்கை கொடுத்தார். ஏனென்றால், யோகி பாபுவின் முடி, உடல் பருமன் உள்ளிட்டவற்றை வைத்து தமிழக மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துவந்ததை நடிப்பால் மக்கள் மனங்களை வென்றார்.
தற்போது, பல படங்களில் ஹீரோ காமெடி நடிகர் என்று கலக்கிவரும் யோகிபாபு தற்போது, நடிகை அஞ்சலியுடன் நகைச்சுவை படம் ஒன்றில் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா படத்தைப் போலவே, இப்படத்திலும் அஞ்சலியை ஒருதலையாக காதலிக்கிறார் யோகிபாபு.
இந்நிலையில், அஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிறது” என்று மண்டை ஓட்டுப் படத்தை வெளியிட்டுள்ளார். இதனால், இப்படம் பேய் படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நடிகை அஞ்சலி கடைசியாக நிசப்தம் படத்தில் நடித்திருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.