சினிமா

`பாலியல் குற்றவாளி யாராக இருந்தாலும் இதை செய்யுங்க!’- ட்விட்டரில் நடிகை அம்பிகா ஆவேசம்!

webteam

`பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது வயது வரம்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நடிகை அம்பிகா சென்னை காவல்துறைக்கு சமூகவலைதளம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

1980 களில் கதாநாயாகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி காதல் பரிசு, காக்கிச்சட்டை, படிக்காதவன், மிஸ்டர் பாரத், விக்ரம், அன்புள்ள ரஜினிகாந்த், சகலகலா வல்லவன் போன்ற படங்களில் கதாநாயகியாகவும், அமர்க்களம், அவன் இவன் போன்ற படங்களில் குணசித்திர நடிகையாகும், சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வருபவர் பிரபல நடிகை அம்பிகா. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நடிகை அம்பிகா தனது கருத்தை பகிர்ந்து வருகிறார்.

அந்த அடிப்படையில் புனித தோமையார் காவல் நிலையத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரகாஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் சென்னை காவல்துறை பதிவு செய்திருந்தது. அந்த பதிவுக்கு கருத்து பதிவு செய்யும் வகையில் நடிகை அம்பிகா ட்விட்டரில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் `குறிப்பாக பாலியல் குற்றங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ யார் தொந்தரவு கொடுத்தாலும், அவர்கள் மீது சிறார்களாக இருந்தாலும், 100 வயது முதியவர்களாக இருந்தாலும் வயது வரம்பின்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் குற்றமே’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு சென்னை காவல்துறையும் நடிகை அம்பிகாவின் பரிந்துரைக்கு நன்றி தெரிவித்து பதில் பதிவிட்டுள்ளது.