சினிமா

ராமேஸ்வரத்தில் அருண் விஜய் - ஹரி படப்பிடிப்பில் இணைந்த நடிகர் யோகிபாபு

sharpana

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘அருண் விஜய் 33’ படத்தில் நடிகர் யோகி பாபு இணைந்திருக்கிறார்.

ஹீரோவாக மட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகராகவும் யோகிபாபு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நகைச்சுவை நடிகராக ‘வலிமை’, ‘பீஸ்ட்’ படங்களில் நடித்துவரும் யோகிபாபு, கடந்த ஒரு வாரமாக ராமேஸ்வரத்தில் நடைபெற்றுவரும் ‘அருண் விஜய் 33’ படப்பிடிப்பில், தற்போது இணைந்திருக்கிறார். ராமேஸ்வரத்தின் பாம்பன் பாலத்தில் நின்று உற்சாகமுடன் கடலை ரசிக்கும் வீடியோவையும், அருண்விஜய், இயக்குநர் ஹரியுடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் யோகி பாபு.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் ‘தமிழ்’, ’சாமி’, ’கோவில்’, ’அருள்’, ’ஐயா’, ’ஆறு’, ’தாமிரபரணி’, ’சிங்கம்’, ’வேங்கை’, ‘சிங்கம் 2’ ‘சிங்கம் 3’உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன. விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், விஷால், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இயக்குநராக பணியாற்றியுள்ள ஹரி இதுவரை தனது மனைவியின் அண்ணனும் நடிகருமான அருண் விஜய்யுடன் பணியாற்றியது இல்லை. இருவரும் எப்போது இணைவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்துவந்த நிலையில், கடந்த வருட இறுதியில் இருவரும் இணையும் ’அருண் விஜய் 33’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் தடைப்பட்டுப் போனது. இந்த நிலையில், தற்போது அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் கடந்த ஜூலை 28 ஆம் தேதிமுதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நடிகர் யோகிபாபு ராமேஸ்வரத்தில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.