சினிமா

“75% மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என போராடுகிறார்கள்” - ஒய்.ஜி.மகேந்திரன்

webteam

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் 25% பேர் மட்டுமே அறிவுடன் போராடுவதாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஒய்.ஜி.மகேந்திரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். பல்பொடி சரி இல்லை என்றால் கூட போராட்டம் நடத்துகின்றனர். வள்ளுவர் கோட்டத்தில் போராட்டங்களை நடத்தி வள்ளுவரை சாகடிக்கின்றனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களில் 25% பேர் போராட்டம் குறித்த அறிவுடன் போராடுகின்றனர். மீதமுள்ள 75% பேர் விடுமுறை கிடைக்கும் எனவும், கலாட்டா செய்யவும் தான் போராடுகின்றனர். பெண்களை சைட் அடிப்பதற்காகவும் போராட்டத்திற்கு செல்கின்றனர். படிக்கும் மாணவர்களுக்கு இது தேவை இல்லாதது. படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ஏதாவது குறைகள் இருந்தால் அதை நியாயமான முறையில் கேட்க வேண்டும். கல் எறிவது, பேருந்துகளை எரிப்பது, கலவரம் செய்வது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது என இருக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.