சினிமா

அது முத்து நகர்; மூச்சுத்திணறும் நகர் அல்ல: ஸ்டெர்லைட் குறித்து நடிகர் விவேக்

அது முத்து நகர்; மூச்சுத்திணறும் நகர் அல்ல: ஸ்டெர்லைட் குறித்து நடிகர் விவேக்

webteam

தூத்துக்குடி ஸ்டெர்லைட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் கருத்திட்டுள்ளார். 

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்தக் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

 இந்நிலையில் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள உள்ளது. இதற்கான அனுமதி கிடைக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை குமரெட்டியார்புரம் கிராமமே ஒன்றுக் கூடி போராடி வருகிறது. திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றன.  

இந்நிலையில் நடிகர் விவேக் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தனது குரலை பதிய வைத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டெர்லைட் பற்றி படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவு உயிர் கொல்லி நச்சுக் கழிவுகள் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் இதுவரை கலந்தனவோ தெரியவில்லையே? அரசு கருணை மனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மன்றாடி கேட்கிறேன். அது முத்து நகர்; மூச்சுத் திணறும் நகர் அல்ல!” என கூறி தனது வேதனையை வெளிப்படுத்து உள்ளார்.