நடிகர் விவேக்கின் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டத்தில் உள்ள பெருங்கோட்டூர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
சின்னக் கலைவாணர் என அழைக்கப்பட்ட நடிகர் விவேக் மாரடைப்பால் இறந்ததைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருங்கோட்டூர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. விவேக் இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். சென்னைக்கு செல்ல முடியாத அவரது உறவினர்கள் தொலைக்காட்சி பெட்டி முன்பு அமர்ந்து பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலை பார்த்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பெருங்கோட்டூர் ஊர் மக்கள் சார்பில் நடிகர் விவேக்கின் உருவப் படம் வைக்கப்பட்டு பொதுமக்கள் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். மேலும் திமுக வேட்பாளர் ஈ. ராஜா, மதிமுக மாவட்ட செயலர் தி.மு.ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.