Vishnu Vishal Aaryan
சினிமா

"எனக்கு விளையாட்டு மீது ஒரு காதல்..” நெகிழ்ச்சியாய்ப் பேசிய விஷ்ணு விஷால்!

தனக்கு விளையாட்டு மீது ஒரு காதல் இருப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

Prakash J

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கி 2022இல் வெளியான படம் `கட்டா குஸ்தி'. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி ஜூலை 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இன்நிகழ்வில் பேசிய விஷ்ணு விஷால். "எனக்கு விளையாட்டு மீது ஒரு காதல் இருக்கிறது. விளையாட்டு சார்ந்த படங்கள் உத்வேகம் தரக்கூடியதாக இருக்கிறது. '

‘சர்பட்டா' படக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரு விளையாட்டு வீரராக எனக்கு அது பிடிக்கும். அந்த மாதிரி படங்கள் செய்வதுதான் எனக்கு ஆரம்பத்தில் இருந்து ஆசை. என்னுடைய முதல் படமே அப்படியான படம்தான் `வெண்ணிலா கபடி குழு'. `ஜீவா', `லால் சலாம்', `கட்டா குஸ்தி' இப்போது அதன் பார்ட் 2. இதற்கு அடுத்து அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் பாக்சிங் படம் ஒன்றில் நடிக்கிறேன். இன்னும் நிறைய ஸ்போர்ட்ஸ் படங்கள் செய்ய விருப்பம் இருக்கிறது.

’முண்டாசுப்பட்டி’, ’இன்று நேற்று நாளை’, ’ராட்சசன்’, ’FIR’ போன்ற படங்களின் பார்ட் 2 எடுக்கப் பேசினோம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. எனவே, இந்த ’கட்டா குஸ்தி 2’ எப்படியாவது சரியாக எடுத்துவிட்டால், மீதியுள்ள பார்ட் 2 படங்கள் எல்லாம் நடக்கும் எனக் கூறினேன். இப்போது படம் பார்த்த அனைவரும் பாராட்டுகிறார்கள். அதேசமயம் பார்ட் 2 என்ற பேருக்காக எடுக்கவில்லை. சரியான ஒரு கதையோடு எடுத்தோம்.

Vishnu Vishal

’வெண்ணிலா கபடி குழு 2’ எனக்குதான் வந்தது. ஆனால் அதில் நான் கேட்ட கேள்வி, ’முதல் பாகத்தில் நான் இறந்துவிட்டேன், இதில் எப்படி வர முடியும்’ என்பது. நீர்ப்பறவை 2வும் வந்தது, அதிலும் நான் இறந்துவிடுவேன். இதை எல்லாம் நான் நடித்திருந்தால் வலிந்து திணித்ததுபோல இருக்கும். இந்தப் படம் மிக நேர்மையாக இருந்ததால் ஒப்புக்கொண்டேன்" என்றார்.