நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்.’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு ரிலீசுக்கு தயாராகி இருந்தநிலையில், பல படங்கள் கொரோனா பரவலால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’, அஜித்தின் ‘வலிமை’, விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ உள்பட பல படங்கள் தள்ளிவைக்கப்பட்டன. தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
அதன்படி, முதல் படமாக விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது. இதையடுத்து மனு ஆனந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக மஞ்சுமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் உள்ளனர். இயக்குநர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அஸ்வத் என்பவர் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகி வைரலாகியது. சமூக வலைதளங்களில் படம் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாக இருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், அதே ரிலீஸ் தேதியை படக்குழுவும் உறுதிப்படுத்தி புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. விஷ்ணு விஷால் திரைப்படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தப் படம் அவருக்கு பிரேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது ‘ஜெகஜால கில்லாடி’, ‘இன்று நேற்று நாளை 2’, விக்ராந்தோடு சேர்ந்து ஒரு படம் என சில படங்கள் உருவாகி வருகிறது. இதேபோல் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படமும் பிப்ரவரி 11-ம் தேதி வெளிவரவள்ளது.