மத கஜ ராஜா வெற்றி விழாவில் விஷால் புதிய தலைமுறை
சினிமா

“இதே Vibe-ல் ஆம்பள படத்தை ரீ ரிலீஸ் செய்ய போகிறோம்” - மத கஜ ராஜா வெற்றிவிழாவில் நடிகர் விஷால்!

“எனக்கு தெரிந்து மனோரமாவை தாண்டி ஆர்யாதான் அதிக படத்தில் நடித்து இருப்பார் என்று நினைக்கிறேன்" - மத கஜ ராஜா வெற்றிவிழாவில் நடிகர் விஷால் கலகல

ஜெ.நிவேதா

சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் மதகஜராஜா படத்தின் வெற்றிவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் சுந்தர் சி, நடிகர் விஷால், அஞ்சலி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத கஜ ராஜா வெற்றி விழாவில் நடிகர் விஷால்

இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால், “(மைக்கை நடுங்கியபடி ஆக்‌ஷன் செய்து) டிடி... திரும்பவும் யூடியூபில் வைரல் ஆகிடுவோமா?” என்று கலகலப்பாக பேசத்தொடங்கினார். தொடர்ந்து அவரே, “அப்படி விட மாட்டேன். நிலநடுக்கம் வந்தால்கூட, சின்ன செய்திதான் வெளியேவரும். ஆனால் என்னுடைய இந்த நடுக்கம் உலக அளவில் பரவிவிட்டது. ஏகப்பட்ட பேர் எனக்கு என்ன ஆனது என்று கேட்டனர்.

கோயில் வாசலில் இருந்த பூக்கார அம்மாகூட ‘தம்பி உனக்கு என்ன ஆனது?’ என்று கேட்டார். தூய்மை பணியாளராக இருந்த ஒரு அம்மாவும், என் உடல்நலனை விசாரித்தார். இந்த அன்பையெல்லாம் மறக்க மாட்டேன். என்னை பிடிக்காதவர்களுக்கு கூட என்னை பிடித்துப்போய்விட்டது. நன்றி.

உண்மையில் என்னுடைய மருத்துவர் ‘அந்த நிகழ்வுக்கு நீங்கள் போக வேண்டாம்; உங்கள் உடல்நிலை சரி இல்லை’ என்று அறிவுறுத்தினார். ஆனால் என் கண் முன் நின்றது சுந்தர் சி. அவருக்காகதான் நான் வந்தேன். ஆனால் என்னைப் பற்றி என்னென்னவோ எழுதிவிட்டார்கள்.

நடிகர், நடிகைகள் பற்றி தவறாக எழுதாதீர்கள்... ஒருவேளை doubt இருந்தால் எனக்கோ என் மேலாளருக்கோ அழைத்து கேளுங்கள்; அதன் பிறகு எழுதுங்கள். தவறாக எழுதாதீர்கள்” என்றார்.

தொடர்ந்து படத்தின் வெற்றி குறித்து பேசிய அவர், “தற்போது நடிகர்கள் இயக்குநர்கள் ஆகி விட்டார்கள், இயக்குநர்கள் நடிகர்கள் ஆகிவிட்டார்கள். எந்த தயாரிப்பாளர்களுக்கும் date கொடுக்க பயமாக இருக்கிறது gst கட்டுவதில்லை, ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை. அதனால் ஜெமினி தயாரிப்பு நிறுவனம் மீண்டும் படங்களை எடுக்க வேண்டும். இது போல் நம்பிக்கையான தயாரிப்பாளர்கள் தேவை.

மத கஜ ராஜா வெற்றி விழாவில் நடிகர் விஷால்

என்னுடைய வாழ்க்கையில் பல அற்புதங்களை சந்தித்தாலும் அழுதது கிடையாது. கடைசியாக கண் கலங்கியதென்றால், அனுமன் படத்தில் வரலக்ஷ்மி நடித்த ஒரு சீனை பார்த்துதான். அதைப் பார்த்து கண்கலங்கி விட்டேன்.

அஜய் ஞானமுத்துவுடன் ஒரு படம், துப்பறிவாளன் 2 படமெல்லாம் அடுத்தடுத்து பண்ண திட்டமிட்டுள்ளோம். என்னுடைய அடுத்த படம் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் அமைகிறது. இதையெல்லாம் விட்டு சுந்தர் சி என்னை அழைத்தால் உடனடியாக ஓடி வந்துவிடுவேன். இந்த Vibe-ஓடு சேர்த்து, ஆம்பள படத்தை ரீ ரிலீஸ் செய்ய போகிறோம்” என்றார்.

தொடர்ந்து மத கஜ ராஜாவில், ஆர்யா நடித்தது பற்றி கேட்கப்பட்டதற்கு, “ஆர்யா மாதிரி ஒரு நண்பர் கிடைத்தது பாக்கியம். ஆர்யா எந்த படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அழைத்தாலும் அதில் நடிக்க சென்று விடுவார். எனக்கு தெரிந்து மனோரமாவை தாண்டி ஆர்யாதான் அதிக படத்தில் நடித்து இருப்பார் என்று நினைக்கிறேன்” என்றாற்.