vishal 34
vishal 34 file image
சினிமா

ஷூட்டிங் சென்ற கிராமத்தில் குடிநீர் வசதி.. அன்போடு விஷால் கொடுத்த முத்தம்.. நெகிழ்ந்துபோன மூதாட்டி!

யுவபுருஷ்

ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் "விஷால் - 34" திரைப்பட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு குமாரசக்கணபுரம் கிராமத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் விஷால், அக்கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக பொதுமக்கள் கூறியதையடுத்து குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய முன்வந்துள்ளார்.

போர்வெல் இயந்திரங்கள் மூலம் அங்குள்ள கண்மாயின் கரையில் போர் போட்டுக்கொடுத்ததோடு, 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தேக்க தொட்டிகள் அமைத்துத்தர ஏற்பாடு செய்துள்ளார். தண்ணீர் பிடிப்பதற்கு ஏதுவாக 6 குழாய்களையும் பொருத்தி கொடுக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் நிறைவடைந்த பின் அதன் திறப்பு விழாவிற்கு தான் கட்டாயம் வருவதாக கிராம மக்களிடம் கூறிச் சென்றுள்ளார் நடிகர் விஷால். படப்பிடிப்பிற்கு வந்த இடத்தில் கிராம மக்களின் தண்ணீர் தேவையை அறிந்து, நடிகர் விஷால் சொந்த செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய மூதாட்டி சென்னம்மாள், “விஷால் சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக வந்தபோது தன்னை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார், எனக்கு ஒன்றும் வேண்டாம், கிராமத்தில்தான் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.

அதற்கு ஏதாவது உதவ வேண்டும் என்று கேட்டேன். நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க.. கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே” என்று கேட்டதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.