actor vishal pt
சினிமா

மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்.. என்னதான் ஆச்சு அவருக்கு?

விழுப்புரத்தில் மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் விஷால் பேசி முடித்தவுடன் மயக்கம் ஏற்பட்டு விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Rishan Vengai

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி மாதம் வெளியானது. 12 ஆண்டுகள் முன்பு வெளியாக வேண்டிய படம், பல்வேறு காரணங்களால் தடைபட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிகரமாக வெளியாகி வசூல் வேட்டையும் நடத்தியது.

ஆனால் படத்தின் PRE RELEASE EVENT நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஷால், கைகள் நடுங்கியபடி மோசமான உடல்நிலையுடன் மேடையில் பேசினார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லப்பட்டாலும் விஷால் கைகள் நடுங்கியபடி பங்கேற்றது பேசுபொருளாக மாறியது.

பின்னர் அந்நிகழ்வு குறித்தும், விஷாலின் உடல்நலன் குறித்தும் அவதூறாக பேசிய யூடியூப் சேனல்கள் மீது வழக்கும் தொடரப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் ஒரு நிகழ்வில் பங்கேற்ற நடிகர் விஷால் மயக்கம் போட்டு விழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயக்கம் போட்டு விழுந்த விஷால்..

விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு தென்னிந்தியா திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் மிஸ் திருநங்கை அழகிப்போட்டி போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷால், மேடையில் பேசி முடித்துவிட்டு கிளம்பும்போது மயக்கம் போட்டு விழுந்தார். ஏற்கனவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விஷால், தற்போது மயக்கம் அடைந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.