சினிமா

“தாக்கவும் இல்லை; தலைமறைவாகவும் இல்லை” - நடிகர் விமல்

“தாக்கவும் இல்லை; தலைமறைவாகவும் இல்லை” - நடிகர் விமல்

webteam

தான் யாரையும் தாக்கவும் இல்லை தலைமறைவாகவும் இல்லை என நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை விருகம்பாகத்தில் தங்கும் விடுதி ஒன்றில் நடிகர் விமல் நண்பர்களுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக பெங்களூரை சேர்ந்த நடிகர் அபிஷேக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் விமல் மற்றும் அவருடன் வந்தவர்கள் அந்த நபரை தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியானது.

இதனால் விமல் தலைமறைவாகி விட்டதாகவும் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையில் நடந்தது என்ன என நடிகர் விமல் மனம் திறந்துள்ளார்.

“மணப்பாறையில் எனது சித்தப்பா காலமானார் என்ற தகவல் எனக்கு வந்ததும் நான் குடும்பத்தினருடன் நள்ளிரவில் புறப்படுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அந்தசமயம் மதுரையில் இருந்து வந்த நண்பர் ஒருவரை நாங்கள் வரும்வரை தங்கவைப்பதற்காக விருகம்பாக்கத்தில் உள்ள எனக்கு பழக்கமான அந்த தங்கும் விடுதி மேனேஜருக்கு போன் செய்தேன். அவர் போனை எடுக்காததால், சரி நாமே நேரில் சென்று அவரை சந்தித்து நண்பரை அங்கே தங்க வைத்து விட்டு வரலாம் என்று கிளம்பிச் சென்றோம். 

அங்கே நுழைவாயில் அருகில் ஒரு நபர் நாற்காலியில் அமர்ந்தபடி ஏதோ செய்து கொண்டிருந்தார். அந்த விடுதியில் வட இந்திய பையன்கள் சிலர் பணிபுரிவதால் அப்படி ஒரு நபராக அவர் இருப்பாரோ என நினைத்து பையா இங்கே யாருமில்லையா என கேட்டேன்.
 
ஆனால் அவரோ தன்னை மரியாதை குறைவாக அழைப்பதாக நினைத்து என்னையா பையா என்கிறாய். நான் யார் தெரியுமா என எங்களுடன் சண்டைக்கு வந்தார். நான் வேலைக்காரன் இல்லை, இங்கே தங்கி இருக்கும் கெஸ்ட் என அவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது. அப்போதும் கூட அவர்தான் யார் என சொல்லாமல் மீண்டும் என்னை எப்படி மரியாதை குறைவாக அழைக்கலாம் என்று பிரச்சனையை பெரிதாக்கவே ஆரம்பித்தார்.

இதனால் என்னுடன் வந்த நண்பர்கள் கோபத்தில் அவரை அடிக்க பாய்ந்தனர். நான் அவர்களைத் தடுத்து விலக்கிவிட்டு அவர் அருகில் உட்கார்ந்து, தம்பி யாருப்பா நீ. ஏன் இவ்வளவு கோவமா பேசுற என அவரை அமைதிப்படுத்த முயன்றேன். ஆனால் அவரோ அமைதியாக பேசிய என்னை 'கெட்டப் கெட்டப்' என கூறி கோபமாக பேச ஆரம்பித்தார்.

இதை அருகில் இருந்து பார்த்த நண்பர்கள் இன்னும் கோபமானார்கள். உணர்ச்சிவசப்படுவது என்பது மனித இயல்புதானே. ஒரு கட்டத்திற்கு மேல் தன்மானத்தை விட்டுத்தர முடியாது இல்லையா? அப்படி உணர்ச்சிவசப்படாத அவன் மண்ணாகத்தான் இருக்க முடியும். அதனால் ஒரு சிறிய கைகலப்பு ஏற்பட, அப்போதும் நான் தான் அவர்களை தடுத்து சமரசம் செய்ய முயற்சித்தேன். அதற்குள் சத்தம் கேட்க மேனேஜரும் ஓடி வந்து நிலைமையை அறிந்து கொண்டு அந்த நபரிடம் எடுத்துக் கூற முயற்சித்தார்.

ஆனாலும் அந்த நபர் நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதை புரிந்து கொள்ளாமலேயே மீண்டும் கடுமையான வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தார். ஒருவேளை அவரது சுபாவமே அப்படித்தானோ என்னவோ. அப்போதும் நான்தான் அவரையும் என்னுடன் வந்தவர்களையும் சமாதானப்படுத்தி காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து சுமூகமாகத்தான் கிளம்பி வந்தோம். அந்த மேனேஜருக்கும் இது நன்றாக தெரியும். அதன்பின் நான் கிளம்பி ஊருக்கு சென்று விட்டேன். 

அங்கே சித்தப்பாவின் காரியங்களை முன்னின்று கவனிக்க வேண்டிய பொறுப்பு இருந்ததால் பெரும்பாலும் என்னுடைய மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்தேன். இதை தவறுதலாக புரிந்து கொண்டு, நான் ஏதோ தலைமறைவாகி விட்டது போலவும் என் மீதுதான் தவறு இருப்பது போலவும் இங்கே வழக்கு பதிவு செய்துவிட்டார்கள். செய்திகளும் அப்படியே வெளியாகின. என் மீது குற்றமில்லை. வழக்கு போட்டாலும் சந்திக்க தயார். சமாதானமாக போகலாம் என்றாலும் அதற்கும் தயார். அதற்காக தன்மானத்தை விட்டுக்கொடுத்து எதையும் பண்ணமுடியாது என நினைத்துக்கொண்டு சித்தப்பாவின் காரியங்களை முடித்துவிட்டு சென்னைக்கு வந்தேன்” எனத் தெரிவித்தார்.