நடிகர் விக்ரமின் ‘மகான்’ டீசர் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள ‘மகான்’ வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாவதையொட்டி தற்போது டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. டீசரில் காந்தி பின்னணியோடு ”தமிழகத்தில் கள்ளுக்கடை ஒழிப்பு போராட்டுத்துல முக்கியமான பங்கு இருக்குடா உன் தாத்தனுக்கு. நம்ம பரம்பரையோட கனவை நிறைவேத்துவியாடா?” என்று ஆடுகளம் நரேன் ஃப்ளாஷ்பேக் காட்சியில் விக்ரமிடம் சத்தியம் கேட்கும்போதே, தற்கால அரசியலையும் ப்ளஸ் அக்கறையையும் சேர்த்து கார்த்திக் சுப்பராஜ் ‘மகான்’ படத்தினை உருவாக்கியுள்ளார் என்பதை உணர்த்துகிறது டீசர்.
அந்த சத்தியத்திற்கு கட்டுப்படாதவராய் வாழும் அடுத்தடுத்து வரும் விக்ரமின் காட்சிகள் மட்டுமல்ல, காஸ்டியூமும் ஸ்டைலிஷ் லுக்கில் கவனம் ஈர்த்து ரசிக்க வைக்கின்றன. ’காந்தி மாதிரி வாழுவியா காந்தி மகான்?’, ‘காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வாழுவதே நம் பிறப்பின் அர்த்தமாகும்’ போன்ற வசனங்கள், சமீபத்திய ‘ஒய் ஐ கில்டு காந்தி’ பட சர்ச்சை, தமிழகத்தில் கோவையில் நடந்த நேற்றைய நடப்புகள் போன்றவற்றை நினைவுக்குக் கொண்டுவந்து காந்தியை நம் மனதில் இன்னும் கம்பீரமாக அமர வைத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
விக்ரமுடன் இப்படத்தில் துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிடோர் நடித்துள்ளனர்.