Vijay sethupathi
Vijay sethupathi 
சினிமா

‘முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் நடிப்பீர்களா?’ - நடிகர் விஜய் சேதுபதி சொன்ன பதில்!

PT WEB

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி கடந்த 19ம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடைபெற்றன.

அதன்படி புகைப்பட கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் விஜய் சேதுபதி பார்வையிட்டார்.

முன்னதாக புகைப்பட கண்காட்சியை பார்வையிட வந்த நடிகர் விஜய் சேதுபதியை வரவேற்க ஏராளமான பொதுமக்களும் அவரது ரசிகர்களும் கூடினர்.

Vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதி, அமைச்சர் மூர்த்தியுடன் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். அதில் மிசா காலகட்டத்தில் சிறையில் முதல்வர் ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகளை காட்சிப்படுத்தும் அரங்கையும் அவர் பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில், ''முதல்வர் ஸ்டாலினின் 70 ஆண்டு கால புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது நம்மை ஆண்டவர்கள் பற்றி தெரிய வருகிறது. கண்காட்சியை பார்க்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு முதலமைச்சர் குறித்த புரிதல் ஏற்படும். நம் முதலமைச்சர் 70 ஆண்டு கால அரசியலில் எப்படி முன்னுக்கு வந்தார் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்” என்றார்.

இங்குள்ள புகைப்படங்கள் மூலம், இந்தியாவிலேயே திமுகவில் மட்டுமே இளைஞர்களால் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிந்தது. அதை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. பெரியார், அண்ணா ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்தது வியப்பாக உள்ளது.
விஜய் சேதுபதி
Vijay sethupathi
செய்தியாளர்கள் தரப்பில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவரின் பதிலும் இங்கே...

‘முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் நடிப்பீர்களா?’

படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. இந்த கண்காட்சியை பார்க்கும் போது வாரிசு அடிப்படையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவில்லை என்பது தெரிகிறது. முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டால் ஒரு புரிதல் கிடைக்கும். முதல்வரின் படங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது

திமுக மாநில உரிமைகள் சார்ந்த விஷயத்தில் எப்படி செயல்படுகிறது?

நான் அதை அரசியலுக்கு வரும்போது சொல்கிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. நான் ஒரு நடிகன். அதில் சந்தோஷப்படுகிறேன்.

முதலமைச்சர் ஸ்டாலின் சாதாரணமாக முதலமைச்சராக வரவில்லை, அதற்கு பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் வேறு வேறு கருத்துக்கள் வரும். அதில் எது சரி, எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக அரசியலை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் அரசியலையும், ஆள்பவர்களையும் தெரிந்து கொள்வது நல்லது.

ரோகினி திரையரங்கம் சம்பவத்தில் உங்களின் பார்வை என்ன?

ஒரு மனிதன் ஓடுக்கப்படுவதையும் நசுக்கப்படுவதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பூமி, மனிதர்கள் அனைவருக்குமானது. அதில் வேற்றுமை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஆகவே தீண்டாமை எங்கு யாருக்கு நடந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது

Vijay sethupathi

தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி புகைப்பட கண்காட்சி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசுகையில், “முதல்வரின் புகைப்பட கண்காட்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆர்வமாக பார்வையிட்டனர். 1 லட்சத்திற்கும் மேலானோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்” எனக் கூறினார்