சினிமா

"இது தமிழர் பிரச்சனை மட்டுமல்ல" ஆளுநருக்கு ட்வீட் செய்த விஜய் சேதுபதி

"இது தமிழர் பிரச்சனை மட்டுமல்ல" ஆளுநருக்கு ட்வீட் செய்த விஜய் சேதுபதி

webteam

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கும் விதமாக  ஆளுநர் பன்வாரிலாலுக்கு நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்து ட்வீட் செய்துள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்கள் விடுதலைக்காக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வருகிறது. அதேபோல தனது மகனான பேரறிவாளனின் விடுதலைக்காக அற்புதம்மாளும் பல்வேறு விதமாக போராடி வருகிறார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில் 7 பேரின் விடுதலைக்காக முயற்சி செய்தார். பின்னர் அதுவும் தாமதமானது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக்‌ கூட்டத்தில் 7 பேரையும் விடுவிக்கும் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டம் 161-ன் கீழ், 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆளுநரிடம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கும் விதமாக ட்விட்டரில் #28YearsEnoughGOVERNOR என்ற ஹேஸ்டேக்கில் பலரும் கருத்து பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில்  ''இது தமிழர் பிரச்னை மட்டும் அல்ல; மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் பரிசீலிக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.