கஇந்திய சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் ’விஜய்’. தொடக்க கால திரைப்பயணத்தில் பல சறுக்கல்களை சந்தித்த அவர், பின்னர் தமிழ்நாட்டு ரசிகர்கள் தூக்கிவைத்து கொண்டாடும் ஒரு ஆக்சன் ஹீரோவாகவும், ரொமாண்டிக் ஹீரோவாகவும் வலம்வந்தார்.
இவருடைய பயணத்தில் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், கில்லி, திருமலை, சச்சின் போன்ற பல டிரேட்மார்க் திரைப்படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படங்களாக இருந்துவருகின்றன.
அந்தவகையில் கடந்த 2000-ம் ஆண்டு விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ’குஷி’ திரைப்படத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஏற்கனவே விஜயின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸாகி வசூல்வேட்டை நடத்திய நிலையில், அவருடைய மற்றொரு படமான சச்சின் திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் விருப்ப படமாக இருந்துவரும் குஷி படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர்கள் விஜய், ஜோதிகா, விஜயகுமார், நிழல்கள் ரவி, விவேக் உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் ’குஷி’. 2000-ம் ஆண்டில் வெளியான இப்படத்தை ஏஎம் ரத்னம் தயாரித்திருந்த நிலையில், தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருந்தார். இவருடைய இசையில் இடம்பெற்ற மேக்கரீனா, ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தன், கட்டிப்பிடி கட்டிப்பிடிடா, மேகம் கருக்குது, மொட்டு ஒன்று போன்ற அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தன.
குழந்தைப் பருவத்தில் சந்திக்கும் இருவர் பின்னாளில் எப்படி வாழ்க்கையில் ஒன்று சேருகிறார்கள் என்ற மையப்புள்ளியில் உருவாகியிருக்கும் திரைப்படத்தை தன்னுடைய மேஜிக்கான ஸ்கீரின்பிளே மூலம் ரசிக்கும்படியாக கொடுத்திருப்பார் இயக்குநர் எஸ்ஜே சூர்யா. காதலர்கள், இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த இத்திரைப்படம் இன்றளவும் அனைவரின் ஃபேவரட் மூவியாக இருந்துவருகிறது.
இந்நிலையில் குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி மீண்டும் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களை குஷியடையச் செய்துள்ளது.
முழுநேர அரசியலில் இறங்கியிருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய இறுதித் திரைப்படமாக ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.