சினிமா

பிகில் பட வசூல் விவகாரம் : வருமான வரி அலுவலகத்தில் விஜய் ஆடிட்டர் ஆஜர்

webteam

பிகில் படத்தின் வசூலை குறைத்துக் காட்டியதாக எழுந்த வரி ஏய்ப்பு புகாரில் அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜயின் ஆடிட்டர்கள் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகினர்.

கடந்த வாரம் நடிகர் விஜய், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள், பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் உள்ளிட்ட 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்‌. நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை வருமானவரித்துறையினர் அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரூபாய் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து நடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜயின் ஆடிட்டர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியனின் ஆடிட்டர் இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆஜராகியதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து ஆடிட்டர்கள் பதில் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.