தெலுங்கின் முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நடிகர் விஜய், அவரது வீட்டில் செடி நடும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கில் முன்னணி ஹீரோவான நடிகர் மகேஷ்பாபு கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிறந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி அவரது 45 வது பிறந்தநாள். கொரோனா சூழலால் ரசிகர்களை தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டவர், பிறந்தநாள் அன்று வீட்டில் செடி நட்டு ”எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்கமுடியாது” என்று பதிவிட்டதோடு #greenindiachallange சவாலை நடிகர் விஜய், என்.டி.ஆர், நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் சேலஞ்ச் செய்தார்.
அதனையொட்டி, இன்று மாலை விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் “இது உங்களுக்குத்தான் மகேஷ்பாபு. பசுமையான இந்தியாதான் ஆரோக்கியமானது. எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்தபோது கடைசியாக மாஸ்டர் பட ஷூட்டிங்கின் நெய்வேலி புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஐந்து மாதங்கள் கழித்து விஜய் ட்விட் செய்துள்ளது, அவர்கள் ரசிகர்களை கொரோனாவையே மறக்கடிக்கச்செய்துள்ளது.
சவாலை ஏற்றுக்கொண்டு விஜய் பதிவிட்டவுடன் அடுத்த 25 நிமிடத்தில் “சவாலை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி சகோதரர். பாதுகாப்பாக இருங்கள்” என்று பதில் ட்விட் போட்டுள்ளார், நடிகர் மகேஷ்பாபு