ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.
அவர் மறைவுக்குப் பிறகு நடக்க இருந்த இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். பணப்பட்டுவாடா புகாரை அடுத்து தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் கங்கை அமரன். தேர்தல் ரத்து செய்யப்பட்டு விட்டாலும் தொகுதியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு. அவர் தயாரிக்கும் படத்துக்கு, ’ஆர்.கே.நகர்’ என்று டைட்டில் வைத்துள்ளார்.
அரசியல் படமான இதில் வைபவ் ஹீரோ. ‘வடகறி' படத்தை இயக்கிய சரவண ராஜன் இயக்குகிறார். வைபவுக்கு ஜோடியாக, ‘சென்னை 600028' இரண்டாம் பாகத்தில் நடித்த சனா அல்டாப் நடிக்கிறார். சம்பத் வில்லனாக நடிக்கிறார்.
‘இது ரொமான்ஸ், திரில்லர் கலந்த படம். ஜூன் முதல் வாரம் ஷூட்டிங் தொடங்குகிறது. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது’ என்றார் வைபவ்.