உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை வரும் மே மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.
மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ’ஜோசப்’ தமிழில் இயக்குநர் பாலா தயாரிப்பில் ‘விசித்திரன்’ ஆக ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் இயக்கிய எம். பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் ஆர்.கே சுரேஷ் நாயகனாக நடித்துள்ள இப்படம் வரும் மே 20 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ’ஜோசப்’ வெளியானபோது தமிழ் ரசிகர்களும் கொண்டாடினார்கள். தற்போது, தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ‘விசித்திரன்’ படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ’விசித்திரன்’ வெளியாகும் அதே மே 20 ஆம் தேதி உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை படக்குழுவினர் திரைக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் இந்தியாவையே உற்றுநோக்க வைத்த 'ஆர்டிகிள் 15' திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.
’பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டரும் டீசரும் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், வரும் மே 20 ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’கண்ணை நம்பாதே’, ‘நெஞ்சுக்கு நீதி’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் நேற்றிலிருந்து மாரி செல்வராஜின் ‘மாமனிதன்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார் உதயநிதி.