ஜல்லிக்கட்டுடன் நின்று விடாமல் முக்கிய பிரச்சனைகள் அனைத்திற்கும் மாணவர்கள், இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் வரலாறு காணாத அறபோராட்டம் நடத்தினர். இதற்கு பல்வேறு திரை பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக அந்நிய குளிர்பானங்களை அருந்துவதையும் பலர் தவிர்த்து வருகின்றனர். அந்நிய குளிர்பானங்களை மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து விற்பனை செய்வதில்லை என வணிகர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சென்னை அருகே தாழம்பூரில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா ‘மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுடன் நின்று விடாமல் முக்கிய பிரச்சனைகள் அனைத்திற்கும் குரல் கொடுக்க வேண்டும்’ என கூறினார்.