‘அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா மேடையிலேயே கண்கலங்கினார்.
‘அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் சோழிங்கநல்லூர் தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகரம் நிறுவனரும் நடிகருமான சூர்யா, மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா அகரத்தின் பொறுப்பாளர் ஜெயஸ்ரீ, அவரது தாய், தந்தை, ஜெயஸ்ரீயின் குழந்தை ஆகியோரையே மேடையிலேற்றி நன்றி தெரிவித்து கண்கலங்கினார். நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய சூர்யா,
“ மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறேன். அனைத்து தன்னார்வலர்களின் சார்பில் இருவரை மேடைக்கு அழைத்துள்ளேன். வழிகாட்டியோர், உழைப்போர் அனைவருக்கும் நன்றி. இங்கிருந்து படித்து சாதித்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை பெறும் தம்பி, தங்கைகள் மட்டுமே எங்களின் உந்துசக்தி. எவ்வளவு நேரம் செலவளிக்கிறோம், எவ்வளவு பணம் செலவளிக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஒரு மணி நேரம் மற்றவர்களுக்காக செலவிட்டாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும்.
அகரத்தில் இருப்போருக்கு மட்டுமல்ல. யாருக்கேனும் கட்டாயம் உதவுங்கள். தன் குடும்பம், தன் வேலை என இருக்கமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளிக்கு தயவுசெய்து மீண்டும் செல்லுங்கள். பள்ளிக்கு உதவுங்கள். கிராம சபைக்கு செல்லுங்கள். அந்த கிராமத்தில் தூர்வாரும் பணிகளுக்கு உதவுங்கள். நிறைய மாற்றங்கள் ஏற்படும்” என தெரிவித்தார்.