suriya - vijay
suriya - vijay கோப்புப்படம்
சினிமா

சூர்யா Vs விஜய் - விவாதத்தை கிளப்பிய கல்வி விருது விழாக்கள்!

PT WEB

லோகேஷ் கனகராஜின் சினிமேடிக் யூனிவர்ஸில் ரோலக்ஸ் சூர்யாவுக்கு, லியோ விஜய் போட்டியாக வருவாரா என கேள்விகள் எழுந்த நிலையில், அந்த போட்டி வேறொரு தளத்தில் உருவாகியிருக்கிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது. அதற்கு காரணம் சூர்யாவின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பு.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 44வது ஆண்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் அகரம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், அதற்காக மேற்கொண்டுவரும் சமூகப் பணிகள் குறித்தும் பேசினார்.

நடிகர் சூர்யா

அதில், தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு மட்டுமின்றி, கல்வி கற்ற சூழலையும் கருத்தில் கொண்டே உதவுவதாகக் கூறினார். இந்த ஒற்றை வரி, நடிகர் விஜய்யின் சமீபத்திய செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு, புதியதொரு விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

நடிகர் சூர்யா

சமூகப் பணிகளில் கவனம் செலுத்திவரும் விஜய், அண்மையில் கல்வி விருது விழாவை நடத்தினார். அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விருதுகளையும், அவர் வழங்கினார். இதற்கு வரவேற்பு கிடைத்த நிலையில், பின் தங்கிய மாணவர்கள் குறித்து, சூர்யா சுட்டிக்காட்டியிருக்கும் இந்த கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட கொள்ள வேண்டுமென்ற பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளன. செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக, சூர்யா மேடையில் சொன்ன இன்னொரு தகவலும், இந்த விவாதத்துக்கு மற்றொரு காரணமாகியிருக்கிறது.

அதன்படி சூர்யா தன்னார்வ அமைப்பாக செயல்படும் அகரம் அறக்கட்டளை, அரசுடன் இணைந்து செயல்படுவதாலேயே அதிகம் பேருக்கு உதவ முடிவதாக கூறினார். அரசுடன் இணைந்து செயலாற்றியதால், மூன்று வருடத்தில் ஒரு லட்சம் மாணவர்களின் வாழ்க்கை மாறியிருப்பதாக குறிப்பிட்டார்.

தனது மக்கள் இயக்கத்தின் மூலம் விஜய் கல்விப் பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில், அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்த சூர்யாவின் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. சூர்யாவின் கருத்துகள், விஜய்யின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு பேசப்படும் நிலையில், கல்வி ரீதியான இருவரின் செயல்பாடுகளும், தடையின்றி தொடர வேண்டுமென்பதே மக்களின் விருப்பம்.