நடிகர் சூர்யா அரசியலுக்கு வரமாட்டேன் என உறுதியாக தெரிவித்தார். அரசியலை வெறுப்பதாக அல்ல, ஆனால் வழி தெரியாமல் அரசியலுக்கு செல்ல விரும்பவில்லை. இளைஞர்கள் அரசியலை முழுமையாகப் புரிந்து செயல்பட வேண்டும் எனவும், கல்வி ஊழலை ஒழிக்க முக்கியமான கருவி எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி மக்கள் தேர்தலில் பங்கேற்று, முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்றிருப்பது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தசூழலில் நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல தமிழ் சினிமா நடிகர்களும் அரசியலில் பிரவேசிக்க திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. போதாக்குறைக்கு நடிகர் அஜித்தின் ரசிகர்கள் கட்சி தொடங்கிய சம்பவங்களும் அடுத்தடுத்து அரங்கேறின.
இந்தசூழலில் நடிகர் சூர்யாவும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற பேச்சுக்களும், கருத்துகளும் அவ்வப்போது வெளிப்பட்டுள்ளன. ஏற்கனவே அவர் அகரம் மூலம் பொதுசேவையில் இருப்பதால், அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இப்படியான சூழலில் தான் அரசியல் குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கும் நடிகர் சூர்யா, “நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. அதற்காக அரசியலை வெறுப்பதாக அர்த்தமில்லை. நான் மௌனமாக, உன்னிப்பாக அரசியலை கவனித்து வருகிறேன். இளைஞர்கள் அரசியலை முழுமையாகப் புரிந்துகொண்டு வர வேண்டும். அரசியல்வாதிகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்வி மூலம் அல்லாமல், ஊழலை மூன்றாவது நபர் ஒழிக்க முடியாது. முழு அர்ப்பணிப்புடன் யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபடலாம்.
வழிதெரியாமல் கூட நான் நிச்சயமாக அரசியல் பக்கம் போய்விட மாட்டேன். என் மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்ய வேண்டும், எனக்கு அடையாளம் கொடுத்தவர்களுக்கு எதையெல்லாம் திருப்பிக் கொடுக்க முடியுமோ, அதையெல்லாம் திருப்பிக் கொடுக்க நினைக்கிறேன். நாங்கள் செய்துகொண்டிருக்கும் வேலைகளை சேவை என்று சொல்ல மாட்டேன்; அது எங்களின் பொறுப்பு. இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை” என சீன் பட நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது.