சினிமா

தப்பு பண்றவங்களுக்கு சாதி,பணம் இருக்கு:ஆனா பாதிக்கப்பட்டவங்களுக்கு?: ’ஜெய் பீம்’ ட்ரெய்லர்

sharpana

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘கூட்டத்தின் ஒருத்தன்’ இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடிக்கிறார் சூர்யா. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு இருளர் இன மக்களுக்காக வாதாடிய வழக்கினையே ‘ஜெய் பீம்’ படமாக உருவாக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லரில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்காக சட்டத்தால் போராடும் வழக்கறிஞர் சந்துருவாக கவனம் ஈர்க்கிறார் சூர்யா. ‘சட்டம் சக்தி வாய்ந்த ஆயுதம். யாரைக் காப்பாற்ற நாம பயன்படுத்துறோம் என்பதுதான் முக்கியம்’ என்று சூர்யா பேசுவது நீதியின் குரலாய் ஒலிக்கிறது. மேலும், ‘சுதந்திரம் கிடைச்சி 50 வருஷம் ஆகுது. ஆனா, இவங்கக் கைல ஒரு அட்ரெஸ் ஃபுருப் கூட இல்ல’ வசனம் டிஜிட்டல் இந்தியா ஆனாலும், இன்னும் இருளில்தான் பழங்குடியின மக்களின் வாழ்வை அரசுகள் வைத்திருக்கின்றன என்பதை வலிமையாக சொல்கிறது.

’ஒரு ஆளுக்கு ஒரு கேஸ்தான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன தலைக்கு ரெண்டு கேஸ் போட்டு விடுங்க’.... ’திருட்டுப் பசங்கள பழங்குடிகள்னு பாலிடிக்ஸ் பண்ணாதீங்க’ போன்ற வசனங்கள் ஆளும் அதிகார வர்கத்தினரின் அடக்குமுறையையும், இளவரசு பேசும் ‘அந்த நாலு குடிசையையும் கொளித்தி விடுறதுக்கு எம்மா நேரம் ஆகிடும்?’ சாதிய மனோநிலையையும் உணர்த்துகின்றன. 

டீசரை தொடர்ந்து ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.