ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை ‘ஜெய் பீம்’ பெற்றுள்ளது.
தா.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ’ஜெய் பீம்’ படத்தில் வழக்கறிஞராக நடித்து கவனம் ஈர்த்தார் நடிகர் சூர்யா. கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியான இப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது பழங்குடியின மக்களுக்காக வாதாடிய உண்மைச் சம்பவத்தையே ‘ஜெய் பீம்’ படமாக உருவாக்கினார் இயக்குநர் ஞானவேல். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைமில் ‘ஜெய் பீம்’ வெளியாகி இந்தியா முழுக்க பாராட்டுகளைக் குவித்தது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியப் படங்களில் முதலிடம் பிடித்ததோடு ஐஎம்டிபி இணையதளத்திலும் உலகளவில் அதிகப் புள்ளிகளைப் பெற்றப் படமாகவும் ‘ஜெய் பீம்’ முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில், ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் ‘ஜெய் பீம்’ படத்தின் 12 நிமிட காட்சிகளும் இயக்குநர் ஞானவேல் படம் குறித்து பேசுவதும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இப்படி பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் ‘ஜெய் பீம்’ என்பது குறிப்பிடத்தக்கது.