செய்தியாளர்: வினோத்
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ’சூர்யா 45’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பனையூரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. குறிப்பாக, நடனக் காட்சி படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. திரிஷா - சூர்யா நடிக்கும் இந்த படத்தில் சோபி மாஸ்டர்தான் நடனப் பயிற்சியாளராக உள்ளார். படப்பிடிப்பு தளத்தில், ஏராள நடனக் கலைஞர்கள் பங்கு பெற்று வந்த நிலையில், ஹசினா என்ற பெண் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ஹசினாவுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் கல்லூரியில் படித்து வருகிறார்.
ஏற்கனவே தந்தையை இழந்த அவருக்கு தாயும் இல்லை என்பதை அறிந்த நடிகர் சூர்யா, நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, மாணவனின் கல்வி உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் தான் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.