நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ’வலிமை’ பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படமும் பொங்கலையொட்டி வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம்தான், ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அறிவித்தார் இயக்குநர் பாண்டிராஜ். மேலும், தனியார் நிறுவனம் தயாரிப்பில் தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ வெளியாகியிருக்கிறது. அதே தயாரிப்பு நிறுவனம் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை தயாரிப்பதால் அடுத்ததாக பொங்கலையொட்டி வெளியிடவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் ‘பீஸ்ட்’ அடுத்த மாதம்தான் படப்பிடிப்பு நிறைவடைவதால் கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல் இறுதியில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.