நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
'ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் மார்ச் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
உடல் மெலிந்து ட்ரெய்லர் முழுக்கவே வேஷ்டி சட்டையில் கலர்ஃபுல்லாக கவனம் ஈர்க்கிறார் சூர்யா. இயக்குநர் பாண்டிராஜின் பெரும்பாலான படங்கள் சமூகத்திற்கான படமாகத்தான் இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தையும் சேர்க்கலாம் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. தனக்கே உரிய குடும்ப சென்டிமெண்ட் ப்ளஸ் கிராமத்துப் பின்னணியில் கதைக்களம் அமைத்துள்ள பாண்டிராஜ், இப்படத்தில் கையில் எடுத்திருப்பது பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை. “இந்த ஊருக்கு வாய் மட்டும்தான் இருக்கும். காது?”..பொண்ணுங்கன்னாலே பலவீனமானவங்கன்னு நினைச்சிட்டிருக்காங்க. இல்ல.. பலம்னு ஆக்கணும்” போன்ற வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன. இமானின் இசையும் ‘எதற்கும் துணிந்தவன்’னுக்கு இன்னும் பலம் சேர்க்கிறது.