சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. அடுத்ததாக, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா- பிரியங்கா மோகன் நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியாகவிருக்கிறது. சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவித்தார் இயக்குநர் பாண்டிராஜ். டப்பிங் பணிகளும் துவங்கியுள்ளன.
சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். வில்லனாக வினய் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். இந்த நிலையில், எதற்கும் துணிந்தவன் வரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இயக்குநர் பாண்டிராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் “நாம் ஆரவாரத்துடன் வரும்போது நேரம் முக்கியமற்றது. நமது பொங்கல் தீபாவளி எல்லாம் பிப்ரவரியில்தான்” என்று உற்சாகமுடன் கூறியிருக்கிறார்.