கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களை சந்தித்த நடிகர் சூரி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
தொற்று வியாதியான கொரோனாவை எதிர்த்து போராட, நாடே ஊரடங்கில் இருந்தாலும் ஒரு தரப்பினர் மக்களின் நலனுக்காக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் என பல தரப்பினர் தொற்று நோயுடன் நேருக்கு நேர் மோதி வருகின்றனர்.
இந்தப்போரில் சில நேரங்களில் அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள வீரர்களை பொதுமக்கள் மதித்து நடக்க வேண்டுமென்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் திருவல்லிக்கேணி காவல் நிலைய காவலர்களை சந்தித்த நடிகர் சூரி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் அவர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி போன்றவற்றையும் வழங்கினார். மேலும் காவலர்களுக்கு வாழ்த்துக் கூறி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்