2012 இல் வெளியான வழக்கு எண் 18இன் கீழ் 9 படத்தை 90ஸ் கிட்ஸ் மறந்திருக்கமாட்டார்கள்... 2023இல் இறுகப்பற்று திரைப்படம் 2கே கிட்ஸின் நினைவுகளில் இருந்து விலகியிருக்காது... இதுமட்டுமின்றி, மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், லோகேஷ் கனகராஜின் மாநகரம், வில் அம்பு என பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தவர், ஸ்ரீ..
இவர் உடல் மெலிந்து, நீண்ட கலரிங் செய்த தலை முடியுடன் பார்க்கவே வித்தியாசமான தோற்றத்துடன் சமீப காலமாக, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தான் சமைக்கும் உணவுகளை, காலை, மதியம், இரவு என தேதியுடன் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இதை கண்ட நெட்டிசன்கள், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் ஸ்ரீ இன் பெண் தோழி ஒருவர், இவர் குறித்த சில தகவல்களை யூடியூப் சேனல் ஒன்றிக்கு வழங்கியிருந்தார். அது மேலும், கேள்விகளை எழுப்பியது.
இந்தநிலையில், இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஸ்ரீ இன் குடும்பத்தினர் , அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
“ நடிகர் ஸ்ரீராம் மருத்துவ நிபுணர்களின் சிகிச்சையில் உள்ளார். தற்போது அவரது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருகிறார் என்று நண்பர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் குணமடைந்து நல்வாழ்வுக்கு திரும்புவதில் கவனம் செலுத்துவதால், அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஊகங்களும் தவறான தகவல்களும் மிகவும் வருத்தமளிக்கிறது.
மேலும், அவரது உடல்நிலைப் பற்றிய வதந்திகள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
சிலரின் நேர்காணல்களில் தெரிவிக்கும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை, அதை முழுமையாக மறுக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி “ என்று தெரிவித்துள்ளனர்