Soori Mandaadi
சினிமா

ரஜினி, விஜய், அஜித்.. நடிகர் சூரி சொன்ன விஷயங்கள்.. கவனிக்கும் திரையுலகம்!

ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் பற்றி நடிகர் சூரி பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இணையத்தைக் கலக்கி வருகிறது.

Johnson

சூரி நடிப்பில் ’மண்டாடி’ படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படம் சம்பந்தமாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் பற்றி பகிர்ந்துகொண்ட விஷயங்கள் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேட்டியில் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டபோது, "சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த காலத்திலேயே நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருந்தேன். அவருடைய ‘தளபதி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தின் தாக்கத்தால் எனது பெயரையே சூரி என மாற்றிக் கொண்டேன். ரஜினி சாருடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தில் நடித்தது எனது நீண்டநாள் கனவு நனவானது. அவர் ரொம்பவும் எளிமையாக பழகக்கூடியவர்.

Rajini

முதன்முறை அவரைச் சந்தித்தபோது நான் நடித்த படங்கள் பற்றியும் காமெடி காட்சிகள் பற்றியும் பேசினார். ரஜினி சார் படத்தை இயக்குபவர் 25 வயது நபராக இருந்தாலும், அவரை ’டைரக்டர் சார்’ என்றுதான் அழைப்பார். அவர்களை மிகவும் மதிப்பார். ஒரு காட்சியில் ரஜினி சார் நடந்து செல்லும்போது நான் பின்னால் வருவது மாதிரி ஒரு காட்சி. அதில் நான் உங்களுக்கு வலது பக்கம் இருந்து ’நான் வரட்டுமா’ என ரஜினி சாரிடம் கேட்டேன். அவர் உடனே, ’அதை டைரக்டர் சார்கிட்ட கேட்டுக்குறீங்களா’ என்றார். சின்ன விஷயத்தில்கூட இயக்குநர் சொல்வதைக் கேட்கும் பண்பு ரஜினி சாருக்கு உண்டு.

விஜய் சார் மிகப்பெரிய நகைச்சுவை உணர்வு கொண்டவர். இதற்கு உதாரணமாக ’ஜில்லா’ படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். அந்தப் படத்தில் என்னை ஒரு சிறுவன் ஊசியைவைத்து குத்துவதுபோல ஒரு காட்சி எடுத்தார்கள். ஊசி குத்தியதும் நான் கொடுக்கும் ஒரு ரியாக்ஷனை பார்த்து விஜய் சார் சிரித்துக்கொண்டே இருந்தார். அவரால் சிரிப்பை அடக்கிக்கொண்டு அந்தக் காட்சியில் நடிக்க முடியவில்லை. இதனால் பலமுறை டேக்கை தொடர முடியாமல் சிரித்துக்கொண்டே அங்கிருந்து விஜய் சார் விலகிச் சென்றார். பல முறை “Sorry” என்று கூறினாலும் அவரால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. மிக கஷ்டப்பட்டுத்தான் அவர் அந்தக் காட்சியை நடித்தார்.

Ajith

இவர்களை தொடர்ந்து அஜித்துடன் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்தவர், "அஜித் சார் ஒவ்வொரு நபர்களையும் மிகச் சமமாகப் பார்ப்பார். `வேதாளம்' படத்தில்தான் முதல் முறை அவருடன் நடித்தேன். முதல் நாள் அங்குச் சென்றதும் மரியாதை நிமித்தமாக அவரைச் சென்று பார்க்கலாம் என கிளம்பிக் கொண்டிருந்தோம். திடீரென பார்த்தால் அவரே கேரவனை திறந்துகொண்டு உள்ளே வந்துவிட்டார். ’சார் நாங்களே வந்திருப்போமே’ என்று சொன்னதும், ’நான் வந்தா என்ன, நீங்க வந்தா என்ன, எல்லாம் ஒண்ணுதான்’ என மிக சகஜமாக பேசினார். அவர் அளவுக்கு யாராலும் சக நடிகர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது. எங்களுக்கு என்று இல்லை, படத்தில் நடிக்க புது நடிகர்கள் யார் வந்தாலும், அவராகவே சென்று அவர்களை வரவேற்பார், உபசரிப்பார்" என்று பேசினார் சூரி. பேட்டியில் சூரி சொன்ன இந்த விஷயங்கள் இப்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது.