இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் இப்படி பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். திரைப்படத்திற்கான ஒன்லைன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடையது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திரைப்படத்தினை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
திரைப்படத்தின் ட்ரைலர்கள், பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்றது. வசனங்களும் பெரும் கவனத்தினைப் பெற்றது. வசனங்களை விவேக் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ள நிலையில் அக்கதாப்பாத்திரத்திற்கு பொப்பிலி மகாதேவி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ‘பொப்பிலி’ பெயர் தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தலைவர் பொப்பிலி அரசர் பெயரைக் குறிப்பது என்பதால் சிலர் கண்டனங்களையும் தெரிவித்தனர். இவை அனைத்தையும் தாண்டி திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா படக்குழுவை வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கேம் சேஞ்சர் கதை மதுரையைச் சேர்ந்த கலெக்டரின் உண்மையான கதை எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “கேம் சேஞ்சர் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அவுட்லைன். அவர்தான் மதுரையில் இருக்கக்கூடிய கலெக்டரின் உண்மையான வாழ்க்கையை, உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எழுதி, அதை ஆந்திராவில் நடக்கும்படியாக மாற்றியுள்ளோம்.
இந்த அவுட்லைன் இயக்குநர் சங்கருக்கு ஏற்ற மாதிரியான அவுட்லைனாக இருந்ததால் அதை பெரிய பொருட்செலவில், பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்கள். படம் வேற லெவலில் வந்துள்ளது. ஒரு அரசியல்வாதிக்கும் கலெக்டருக்கும் நடக்கும் போர்தான் கதை” எனத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த கலெக்டர் யாராக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.