சினிமா

எம்.ஜி.ஆருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது: நடிகர் சிவகுமார் சொன்ன தகவல்

எம்.ஜி.ஆருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது: நடிகர் சிவகுமார் சொன்ன தகவல்

webteam

எம்.ஜி.ஆருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என நடிகர் சிவகுமார் தெரிவித்தார்

பாடலாசிரியர், இயக்குநர், பத்திரிகையாளர் என பல முகம் கொண்டவர் எம்.ஜி.வல்லபன். அவரை பற்றிய அருள்செல்வன் தொகுத்த 'சகலகலா வல்லபன்' என்ற நூல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். 

அப்போது பேசிய நடிகர் சிவகுமார்,"திருத்துறைப்பூண்டியில் ஒரு அம்மா இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஆறேழு வயதில் ஒரு பையன் இருந்தான். பள்ளிக்கூடம் போகிற பையனுக்கு 4 இட்லி வைத்துவிட்டு குளிக்கப் போனாள் தாய். அப்போது அந்தப் பையன் அம்மாவுக்கு தெரியாமல் 2 இட்லியை எடுத்துச் சாப்பிட்டு விட்டான். அவன் கூடவே சித்தியும் இருந்தாள். அம்மா குளித்து விட்டு வந்த போது '' நீயில்லாத போது உன் பையன் 2 இட்லியைத் திருடி விட்டான்.'' என்று சித்தி சொன்னாள். அவனுக்காகத்தானே நான் இந்தத் தொழிலைச் செய்கிறேன்?'' என்று கூறி மறுநாள் முதல் அவனுக்கு 3 இட்லியை கூடுதலாகக் கொடுக்க ஆரம்பித்தாள் அந்தத்தாய்.. அன்று இட்லி திருடிய பையன் வேறு யாருமில்லை. எஸ்.எஸ்.வாசன். இவ்வளவு ஏழ்மையில் இருந்த வாசன் சைக்கிளோடு சென்னை வந்தார். பெரிய தயாரிப்பாளர் ஆனார். 1948ல் கல்கத்தாவிலேயே தன் படத்துக்கு 10450லேம்ப் போஸ்ட்டர் போட்டவர் எஸ்.எஸ்.வாசன். 1934ல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். அவர் கதாநாயகனாக நடித்த பவளக்கொடி படத்தில் அவருக்கு 750 ரூபாய்தான் சம்பளம். கதாநாயகிக்கு 1000 ரூபாய் சம்பளம். இயக்குநருக்கு 500 ரூபாய் சம்பளம்.  
சைக்கிள் ஒட்டத் தெரியாமல் வாடகைக்கு ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டுபோய் முதல் வாய்ப்பை வாங்கி அதில் நடித்தவர் எம்.ஜி.ஆர். அவர் 10 ஆண்டுகள் போராடி 'ராஜகுமாரி'யில் நடித்தார். பல ஆண்டுகள் போராடினார் .அப்படி குட்டிக்கரணம் போட்டுத்தான் எம்.ஜி.ஆர். மேலே வந்தார். அன்று கையில் பத்து ரூபாய் இருந்த போது ஏழு ரூபாய் தனக்காக செலவு செய்து கொண்டு மீதமுள்ள மூன்று ரூபாயை தானம் செய்தவர் அவர். உன் கையில் பத்து ரூபாய் இருக்கும் போதே தானம் செய்ய முடியாவிட்டால் உன்னிடம் 1000 ரூபாய் இருந்தாலும் தானம் செய்யமாட்டாய்..என்று அவர் சொன்னார். இது போன்ற தகவல்கள் எல்லாம் வெளிக் கொண்டு வந்த பத்திரிகை பேசும்படம். அந்தப் பேசும் படத்தில் வல்லபன் இருந்தார். சிவாஜி எம்.ஜி.ஆர். பத்தினி, சாவித்ரி என்று என்னை மாதம் இரண்டு ஓவியங்கள் வரைய வைத்து 24 ஓவியங்களை அந்தப் பத்திரிகையில் வெளியிட்டார். அதன்பிறகு பிலிமாலயா பத்திரிகை நடத்தினார். அதில் அவர் 'நல்லதைச் சொல்லும் போது நன்றி கூற நேரமில்லாதவர்கள், அல்லதைச் சொல்லும் போது எரிந்து விழ உரிமையில்லாதவர்கள்' என்று ஒரு வாசகம் போட்டிருந்தார்.. என்ன ஒரு தைரியம் பார்த்தீர்களா? 

பிலிமாலயாவில் 'எரிச்சலுட்டும் எட்டு கேள்விகள் 'என்று சினிமா ஆட்களிடம் கேட்டு பதில் வாங்கிப் போடுவார். என்னிடம் மகாவிஷ்ணு, சிவன் என்று சாமி வேடமே போடுகிறீரே நடிக்க வராதா என்று கேள்வி கேட்டார்கள். சினிமாவே விஷூவல் மீடியா என்று சொல்கிறார்கள் நீங்கள் பக்கம் பக்கமாக வசனம் வைத்துள்ளீர்களே என்று வாசனிடம் கேட்டுள்ளனர் .
முதன் முதலில் ஆபாவாணனையும் பாரதிராஜாவையும் பீச்சில் சந்திக்க வைத்து பேட்டி போட்டவர் வல்லபன். இதைவிடப் பெரிய விஷயம் இளையராஜா என்கிற மாணிக்கத்தைக் கண்டுபிடித்து உலகத்துக்கு முதலில் சொன்னது வல்லபன்” என்று சிவகுமார் பேசினார்.