சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பதோடு லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ படத்தை வரும் டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
அனிருத் இசையமைக்க, பிரியங்கா அருள்மோகன் ’டாக்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் விறுவிறுப்பாக துவக்கியுள்ளது படக்குழு. சமீபத்தில் பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்தப் படப்பிடிப்பு தற்போது இந்தியாவின் பெருமையும் உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலில் நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டோர் ’டான்’ படக்குழுவினருடன் தாஜ்மஹாலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில், நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டரும் இருக்கிறார். அதனால், பாடல் காட்சியை தாஜ்மகாலில் படமாக்குகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது.