சிவகார்த்திகேயன் சென்ற BMW கார், ஹூண்டாய் கார் மீது மோதியதால் அடையாறு அருகே பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து OMR சாலையில் செல்வதற்காக தனது BMW காரில் சென்றுள்ளார். அப்போது இரவு 7:40 மணியளவில் OMR சாலையில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஒருவர் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் சென்று கொண்டிருந்துள்ளார்.
சரியாக மத்திய கைலாஷ் சிக்னலில் இருவரும் வலது பக்கம் திரும்பும்போது, திடீரென அந்த காரை ஓட்டி வந்த பெண் தனது ஹூண்டாய் காரை OMR சாலையின் நோக்கி வலது பக்கம் திருப்பியதாக கூறப்படுகிறது.
அப்போது பின்னால் BMW காரில் சென்ற சிவகார்த்திகேயனின் காரானது, பெண் ஓட்டி சென்ற ஹூண்டாய் காரின் பின்புறம் லேசாக இடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது காரில் இருந்து இறங்கிய நிலையில், அந்த காரை ஓட்டி வந்த பெண்ணும் காரை விட்டு இறங்கியுள்ளார். இதனிடையே அந்த சிக்னல் அருகே போக்குவரத்தை சரிசெய்து கொண்டிருந்த காவல்துறையினரும் அங்கு வந்துள்ளனர்.
காரை ஓட்டிச் சென்ற பெண் தன் மீது தான் தவறு எனக்கூறி மன்னிப்பு கேட்டுக் கொண்ட நிலையில், அந்த பெண்ணும் சிவகார்த்திகேயனும் கைகுலுக்கி சமரசமாக சென்றனர். இச்சம்பவம் குறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை எனவும், சிறிய கீறல் போன்ற விபத்து எனவும், இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கோட்டூர்புரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.