பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி. 90களில் இருந்து பல தெலுங்குப் படங்களில் நடித்து வந்தவர், 2016க்குப் பின் நடிக்காமல் இருந்தார். பிறகு இந்த ஆண்டு, நானி தயாரிப்பில் உருவான `கோர்ட்' படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அந்தப் படமும், சிவாஜியின் வில்லத்தனமான நடிப்பும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள `தண்டோரா' படம் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் படம் பற்றி பேசிய சிவாஜி, பேச்சை முடிக்கும்போது பெண்களின் ஆடை பற்றி மிக மோசமான விதத்தில் அநாகரிகமாகப் பேசினார். அந்த பேச்சுக்கு இப்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவர் பேசியபோது, "ஹீரோயின்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், நீங்கள்தான் பிரச்னையை சந்திக்க வேண்டி இருக்கும். என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்குப் பிரச்னை இல்லை. எப்படிச் சமாளிப்பது என எனக்குத் தெரியும். உங்கள் அழகு முழுதாக மூடும் சேலையில்தான் உள்ளதே தவிர, அங்கங்கள் தெரியும்படி அணியும் உடைகளில் இல்லை. அப்படியான ஆடைகளை அணிந்தீர்கள் என்றால், பார்ப்பவர்கள் வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாமல் சிரிப்பார்கள்தான். ஆனால் ’தரித்திர ----------, ஏன் இப்படியான உடைகளை அணிகிறாய்?, நல்ல உடைகளை அணியலாம் அல்லவா? நன்றாக இருப்பாயே’ என்று சொல்லத் தோன்றும். ஆனால் சொல்ல முடியாது. ஏனென்றால், பெண் சுதந்திரம் என பேசுவார்கள்.
பெண்கள் என்றால் இயற்கை. எவ்வளவு அழகாக இருக்கிறார்களோ, அவ்வளவு மரியாதை கூடும். இந்த இயற்கை அழகானது. அப்படியே பெண், என் தாய்போல அழகாக இதயத்தில் நிறைந்திருப்பார். சாவித்ரி, சௌந்தர்யாபோல. இந்த தலைமுறையில் ராஷ்மிகா போன்ற பலர் இருக்கிறார்கள். க்ளாமர் என்பது ஓர் அளவுவரையே இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் நன்றாக இருக்காது. நான் யார் இதைச் சொல்ல? எங்களுக்குச் சுதந்திரம் இல்லை என நிறைய பேர் கிளம்பி வருவார்கள். சுதந்திரம் என்பது அதிர்ஷ்டம். அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள். நம் மரியாதை எப்போது கூடும் என்றால், நாம் பேசும் மொழியில் இருந்தே நம் மரியாதை கூடும். அப்படித்தான் உலக மேடையில்கூட சேலை கட்டியவர்களுக்கே அழகி என்ற கிரீடங்கள் கிடைத்தன" என்றார்.
இவர் இதற்கு முன் நடித்த `கோர்ட்' படத்தில் பிற்போக்குதனமான, ஆணாதிக்கவாதியாக நடித்திருந்தார். இவர் படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் அப்படித்தான் இருக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கூடவே இந்தப் பேச்சுக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பல குரல்கள் எழுந்துள்ளது.