சினிமா

பிரச்னை பண்ண கமிஷ்னர் அலுவலகம் வரவில்லை - நடிகர் சிம்பு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகானை எப்போது வெளியே விடுவீர்கள் என்பதை அறிந்துக்கொள்ளவே இன்று காவல் ஆணையர் அலுவலகம் வந்துள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது சிறையில் உள்ளார். அதற்காக நியாயம் கேட்டு கமிஷ்னர் அலுவலகம் செல்ல இருப்பதாக நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர், “ மனிதநேய அடிப்படையில் ஒரு மனித உரிமைக்காக மனிதாபிமானம் கொண்ட ஒரு மண் வாசனைக் கொண்ட, மதச்சார்பற்ற அரசியல் சார்பற்ற, ஒரு தனி மனிதனை தமிழ் கலைஞனை, அதாவது அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களை விடுதலை செய்யக் கோரி கமிஷ்னர் ஆஃபீஸ் சென்று மனுக்கொடுக்க இருக்கிறேன்” என்று அவர் பேசியிருந்தார்.  இதனையடுத்து நடிகர் சிம்பு இன்று காலை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தார், அப்போது அவர் " நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிய வந்துள்ளேன்.  அவரை விடுதலை செய்யும்படி நான் கோரவில்லை, மனுவும் அளிக்கவில்லை மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தையும், எப்போது விடுவிக்கப்படுவார் என்பதையும் அறிய வந்தேன். எந்தப் பிரச்சனையும் செய்ய நான் வரவில்லை. ஐ.பி.எல் போராட்டத்தின்போது காவல் துறையினர்  தாக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை திருப்பி தாக்குதல் நடத்தாமலிருந்ததற்கு பாராட்டுகள் என்றார் அவர்.