நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த்  முகநூல்
சினிமா

”என் வயிற்றில் யாராவது உதைத்தால்..” - கர்நாடகாவில் நடந்தது குறித்து மௌனம் உடைத்த சித்தார்த்!

ஜெனிட்டா ரோஸ்லின்

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சந்திரமுகி 2, இறைவன் உள்ளிட்ட படங்களுடன் தன்னுடைய சித்தா படத்தை களத்தில் இறக்கினார் நடிகர் சித்தார்த். வெளியாவதற்கு முன்பே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் நல்ல திரைப்படமாக அமையும் என்று நம்பிக்கையோடு கூறிவந்தார். அவரது நம்பிக்கைக்கு ஏற்ப நல்ல விமர்சனங்களை பெற்று கூடுதல் காட்சிகளும் திரையரங்குகளில் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் பெங்களூருவில் ”சித்தா” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சித்தார்த் பேசினார். கடந்த சில தினங்களாக அது குறித்து பேசாமல் மௌனம் காத்து வந்த அவர் இன்று சென்னையில் அது குறித்து பேசினார்.

சித்தா

அப்போது அவர் கூறியதாவது, ”சித்தா திரைப்படமானது 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அன்றைக்கு எந்த இடத்திலும் பந்த் கிடையாது. அன்றைக்கு நாங்கள் ஒரு பிரைவைட் ஆடிட்டோரியத்தில்தான் சித்தா படத்தின் செய்தியாளர் சந்திப்பை நடத்தினோம். அப்போது திடீரென்று சில பேர் அங்கு வந்து என்ன செய்தார்கள் என்று நீங்களே கேமராவில் பார்த்திருப்பீர்கள். இது குறித்து நிறைய தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.

நடிகர் சித்தார்த்

நான் பந்த் அன்று சுயநலமாக செயல்பட்டேன் என்று. ஆனால் அன்று பந்த்யெல்லாம் கிடையாது. அடுத்த நாள் தான் பந்த். எனவே அன்று என் வேலையை நிறுத்துவதற்கான எந்த சட்டரீதியாக நடவடிக்கையையும் யாராலும் எடுக்க முடியாது. நாங்கள் எந்த தவறையும் செய்யவும் இல்லை. நான் என் வாழ்க்கையிலே சிறப்பான ஒரு பாடமாக கருதுகின்ற சித்தா படத்தை எடுத்து இருக்கிறேன். ஆனால் அதை பற்றி எதையும் கேட்காமல் இந்த பிரச்சனை பற்றியே பேசுவது எனக்கு மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.

அன்று நடந்த சம்பவத்தில் அதற்கு தொடர்பில்லாத பெரிய மனிதர்கள் இதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். சிவராஜ் குமார் சார், பிரகாஷ் ராஜ் சார் போன்றோரெல்லாம் ரொம்ப பெரிய மனிதர்கள். அவர்கள் ஊரில் எனக்கு இப்படி நடந்திருப்பதற்காக அவர்களே மன்னிப்பு கேட்டு இருக்கிறார்கள்.அந்த மன்னிப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் எந்த தவறையும் செய்யவில்லை. அவர்கள் எனக்கு துணை நின்றது ரொம்ப பெரிய அழகான விஷயமாக பார்க்கிறேன். அவர்களது பெரிய மனதிற்கும் இரக்கத்திற்கும் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் சித்தார்த்

முக்கியமாக சிவாண்ணா நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர். உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. நாம் ஒரே நதி தண்ணீரில்தான் குளிக்கிறோம்.இங்கு இருக்கிற அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதை பற்றி 20 வருடமாக பேசியதும் கிடையாது. இப்பொழுது பேசவேண்டிய அவசியமும் கிடையாது.

என்னை போன்று எந்த தயாரிப்பாளருக்கும் இப்படி நடக்க கூடாது. இதிலிருந்து அரசியலை வெளியே எடுத்து விடுங்கள் . என்னுடைய படத்தினுடைய ரிலீஸ் அன்று தான் என்னால் என் படத்திற்காக பிரச்சாரம் பண்ண முடியும். அதை விட்டு விட்டு இங்கு இவ்வளவு பெரிய பிரச்னை நடக்கிறது ,அதைவிட்டுவிட்டு நீ இப்படி செய்கிறாய் என்றால், ஒரு தயாரிப்பாளராக நான் என்ன செய்ய முடியும்?

சித்தா விமர்சனம்

என்னால் என் பொழப்பை மட்டுமே பார்க்க முடியும். என் வயிற்றில் யாராவது உதைத்தால் அதற்காக குரல் கொடுக்க என்னால் முடியும். தயாரிப்பாளர் சங்கம் இதை பற்றி பேச வேண்டும். ஒரு தமிழ் தாயாரிப்பாளருக்கு இனிமேல் இப்படி நடக்க கூடாது. அதே சமயம் கன்னட மக்களுக்கும் எனக்கும் பிரச்னை இல்லை. திரைத்துறைக்கும் எனக்கும் பிரச்னை இல்லை.அன்று ஏனோ அப்படி நடந்துவிட்டது. இதை பயன்படுத்தி என் படத்திற்கு விளம்பரத்தை தேட நினைக்கும் ஆள் நான் இல்லை. எனக்கு என் படம் தான் முக்கியம். அதை எல்லா தரப்பினரும் கொண்டாடுகின்றனர். தயவு செய்து அதை சென்று பாருங்கள்” என்று பேசினார்.