சினிமா

ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த ‘காசேதான் கடவுளடா’ படக்குழு - விரைவில் வெளியீட்டு தேதி

sharpana

ஆர்.கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிக்கும் ’காசேதான் கடவுளடா’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், லட்சுமி நடிப்பில் கடந்த 1972-ஆம் ஆண்டு வெளியான 'காசேதான் கடவுளடா' நகைச்சுவை திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் தற்போது அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்கிறார். பிரியா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி தொடங்கிய நிலையில், விறுவிறுப்புடன் 80 சதவீத படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. மிர்ச்சி சிவாவுடன் ஊர்வசி, யோகி பாபு, கருணாகரன், மனோ பாலா, தலைவாசல் விஜய், 'குக் வித் கோமாளி' புகழ், சிவாங்கி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். என். கண்ணன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கண்ணன் பேசும்போது, “எனது முந்தைய சில படங்களின் படப்பிடிப்பை விரைவாக முடித்திருக்கிறேன். ஆனால், ’காசேதான் கடவுளடா’ முற்றிலும் வேறானது. அனைவரும் முடங்கியிருந்த பொது முடக்க காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.

இவ்வளவு விரைவாக இப்படத்தை முடிக்க நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன் உட்பட்ட நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் மட்டுமே தான் காரணம். அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் தான் இது சாத்தியமானது. விரைவில் படத்தின் விஷுவல் புரமோவுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளோம். படத்தின் திரை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விரைவில் வெளியிடவுள்ளோம்” என்றார்.