சினிமா

சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம் என்பதே அயோத்தியின் கருத்து - நடிகர் சசிகுமார்

webteam

சாதி மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம் என்ற கருத்து அயோத்தி திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று நடிகர் சசிக்குமார் தஞ்சாவூரில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். 

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குனருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள 'அயோத்தி’ திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெறும் ’நந்தன்’ என்கிற புதிய திரைப்பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள வந்த நடிகர் சசிக்குமார் அயோத்தி திரைப்படத்தை திரையரங்கில் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் பேசும்போது, ”சாதி மதம் தாண்டி மனிதம் தான் முக்கியம். மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்ற விஷயம் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற எல்லோரும் கடந்து வந்துள்ள, செய்தியைத்தான் இந்த படத்தில் சொல்லி இருக்கோம். நல்ல படம் எடுத்தால் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார். இந்நிகழ்ச்சியில் திரையரங்க நிர்வாகிகள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழர்கள் நாம் வட மாநிலத்தவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம். அதுதான் இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றார். இந்தப் படத்தில் உள்ள சர்ச்சைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தக் கதை எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு விஷயம் தான், அயோத்தி என்பது எல்லோரும் கடந்து வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் வருவது போன்று துபாயிலும் ஒரு நண்பர் இறந்தவர்களை சமூக சேவையாக அடக்கம் செய்து வருகிறார். இது போல மதுரையிலும் ஒருவர் செய்து வருகிறார். எல்லாருடைய வாழ்க்கையிலும் கடந்து வந்தது இது என்று தெரிவித்தார்.