சினிமா

நடிகர் சந்தானம் தலைமறைவு: முன்ஜாமீன் கேட்டு மனு

நடிகர் சந்தானம் தலைமறைவு: முன்ஜாமீன் கேட்டு மனு

webteam

பில்டிங் காண்ட்ராக்டரை தாக்கிய புகாரில் நடிகர் சந்தானம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் முன்ஜாமீன் கோரி சென்னை
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் சந்தானம் வளசரவாக்கத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருடன் இணைந்து, குன்றத்தூர் அடுத்துள்ள மூன்றாம் கட்டளை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டதாக தெரிகிறது. இதையடுத்து கட்டடம் கட்டும் திட்டத்தை கைவிட்டதால், தான் கொடுத்த தொகையை அவர் திரும்பக் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், சண்முகசுந்தரம் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் காயமடைந்தனர். சந்தானத்திற்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிற‌து. 

இந்நிலையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் சந்தானம் தாக்கிவிட்டதாக, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பில்டர் சண்முகசுந்தரம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், 3 பிரிவுகளின் கீழ் சந்தானம் மீது வழக்கு‌ பதியப்பட்டுள்ளன. இதேபோல சந்தானம் அளித்த புகாரின் பேரில் சம்‌பந்தப்பட்ட கான்ட்ராக்டர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் காயமடைந்ததாக கூறப்படும் சந்தானம், தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை
மருத்துவமனையில் அவரை சந்திக்க காவல்துறையினர் சென்ற போது அவர் அங்கில்லை என தெரியவந்தது. அவர் இப்போது எங்குள்ளார் என்று விசாரணை நடந்து வருகிறது. அவர் மருத்துவமனைக்கு எடுத்து சென்ற கார் மட்டும் தனியாக நிற்பதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவரது டிரைவரையும் காணவில்லை. இந்நிலையில் நடிகர் சந்தானம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் மீதான தாக்குதலை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.